Come Back ஸ்பெஷல் தந்த உற்சாகத்தில் இதோ ஒரு பதிவு.
சிலபல மாதங்களுக்கு முன்னர் ஆங்கிலத்தில் வரவிருக்கும் புத்தகங்கள் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்.
இந்த பதிவில் கடைசியாக சிஸ்கோ கிட் புத்தகம் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். ஒரு வழியாக அந்த புத்தகம் வந்தேவந்துவிட்டது.
http://www.amazon.com/Cisco-Jose-Luis-Salinas-Reed/dp/1450780636/ref=sr_1_5?ie=UTF8&qid=1325337835&sr=8-5
ஆர்டர் கொடுத்து சென்றவாரம் இந்த புத்தகம் என் கைகளில் வந்து சேர்ந்தது. எல்லா கதைகளையும் இன்றுதான் படித்து முடித்தேன். படித்த கையோடு இதோ பதிவு.
புத்தகத்தின் அச்சு தரம் பற்றி முதலில். ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் வந்த கதைகளின் ப்ரூப் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் நான்கு அல்லது ஐந்து பக்கங்களில் தரம் மிகவும் மோசம். அதைத்தவிர மற்றபடி இது கண்களுக்கு ஒரு விருந்து. சிஸ்கோ கிட் ரசிகர்கள் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகம். செய்திதாள்களில் வந்த அதே அளவுக்கு படங்களை பார்ப்பதே ஒரு அற்புதமான அனுபவம் தான். ஒருசாதாரண கவ்பாயை உயிருடன் உலவவிட்டிருக்கும் ஜோஸ் சலினாசின் படங்களை கண்டிப்பாக இந்த அளவிலாவது பார்க்கவேண்டும்.
அட்டைப்படம் ஒரு அட்டகாசமான டிசைன். முதன்முதலில் இந்த அட்டைப்படத்தை பாத்ததுமே புத்தகத்தை கண்டிப்பாக வாங்க முடிவு செய்துவிட்டேன். முன்னட்டையும், பின்னட்டையும் இதோ உங்களுக்காக.
ரீப்ரிண்ட்களில் சாதாரணமாக இருக்கும் அத்தனை அம்சங்களும் இந்த புத்தகத்தில் உண்டு.
சிஸ்கோ கிட் மட்டும் தனியாக இருக்கும் இந்த படம் தான் முதல் பக்கம்.
ஓவியர் இந்த தொடருக்காக வரைந்த மாதிரிப்படம்.
அதனை அடுத்து வருவது கதைப்பட்டியல்.
ஒரு புத்தகம் வெளியிட்டால் அதற்கு முன்னுரை தர ஒரு பிரபலம் வேண்டும். அந்த பார்முலாப்படி இதற்கு முன்னுரை உண்டு.
முதன்முதலாக சிஸ்கோ கிட் என்ற கதாபாத்திரம் வந்தது ஓ. ஹென்றி 1907-இல் எழுதிய ஒரு சிறுகதையில்தான். அந்தக்கதை இந்த புத்தகத்தில் முழுவதுமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நமக்கு தெரிந்த சிஸ்கோ கிட்டிற்கும் இந்த கதாபத்திரத்திற்கும் சம்பந்தம் இல்லாததால் இந்த கதை பற்றிய முன்னுரையும், கதையின் முதல் பக்கமும் மட்டும் இதோ உங்கள் பார்வைக்கு.
டென்னிஸ் வில்கட் என்ற காமிக்ஸ் புத்தக ரசிகர் எழுதிய முகவுரையும் இதில் உண்டு.
இவையெல்லாம் முடிந்து கதைகள் ஆரம்பிக்கின்றன ஒரு வழியாக. மொத்தம் எட்டு கதைகள். இதில் தமிழில் வந்தது ஒன்று மட்டும்தான் என்று நினைக்கிறேன். AFI மாலைமதியில் மற்ற கதைகள் வந்திருந்தால் அதுபற்றி என்னிடம் தகவல் இல்லை. மன்னிக்கவும். உங்களுக்கு ஏதாவது விபரம் தெரிந்திருந்தால் கமெண்ட்ஸ் பகுதியில் குறிப்பிடவும்.
முதல் கதை வந்த ஆண்டு 1951. கதையின் தலைப்பு Judge Hook. ஒரு டுபாக்கூர் ஜட்ஜ் எப்படி மக்களை ஏமாற்ற முயற்சி செய்கிறார் என்பதுதான் கதை. இந்த கதை ஏற்கனவே 1983-ம் ஆண்டு வெளிவந்த சிஸ்கோ கிட் புத்தகத்தில் உண்டு.
கதையின் முதல்பக்கம் இதோ.
கதை எண் - 2: Princess Red Flower. ஒரு செவ்விந்திய இளவரசிக்கு சிஸ்கோ கிட் எப்படி உதவி செய்கிறார் என்பதுதான் கதை. இந்த கதை கொஞ்சம் கொஞ்சம் காப்டன் டைகர் சாயலில் இருக்கும். செவ்விந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது, அவர்கள் பொங்கி எழுகிறார்கள், ஆனால் போருக்கு போனால் நிறைய பேர் சாக வேண்டும், ஆனால் ஞாயமும் வேண்டும். இங்கேதான் சிஸ்கோ வருகிறார். போர் தவிர்க்கப்படுகிறது, ஞாயமும் கிடைக்கிறது. அனேகமாக இதுபோல பலகதைகள் வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த கதையின் முதல் பக்கம் இதோ.
கதை எண் - 3: Jolly Station. ஒரு பாடகி பற்றிய கதை. அந்த பாடகி சிஸ்கோவை காதலிப்பது போல ஆரம்பிக்கிறது. ஆனால் கடைசியில்தான் தெரிகிறது அவருடைய தந்தையை காப்பாற்றத்தான் அப்படி செய்கிறார் என்று. சிஸ்கோவிற்கு கல்யாணம் ஆகிவிட்டால் சாகசங்கள் எப்படி தொடரும் :-)
கதை எண் - 4: Deadly Stage Ride. இந்த கதை தமிழில் வந்த கதைதான். லயன் காமிக்ஸில் இதழ் எண் 163.
இந்த இதழின் அட்டைப்படமும், ஆசிரியரின் ஹாட்லைனும்.
கதை எண் - 5: In search of Diablo. சிஸ்கோவின் குதிரை தந்திரமாக அவரிடமிருந்து திருடப்படுகிறது. அதை எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை. அவரின் குதிரை லக்கி லூக்கின் ஜாலி ஜம்பர் போல இல்லாவிட்டாலும் கொஞ்சம் சாகசம் செய்கிறது.
கதை எண் - 6: Cisco's Bad Wound. போன கதையின் முடிவில் சிஸ்கோவிற்கு பட்ட அடிதான் இந்த கதையும் அஸ்திவாரம்.
கதை எண் - 7: The Loco K Ranch. ஒரு கூமுட்டை பண்ணையில் நடக்கும் கூத்துதான் இந்த கதை.
கதை எண் - 8: Gypsy Prophecy. இந்த கதையை எங்கேயோ பார்த்த ஞாபகம். ஆனால் தமிழ்தானா என்று தெரியவில்லை.
பதிப்பாசிரியரின் கஷ்டங்கள் பற்றி அவரது வார்த்தையில்.
மேலும் இந்த பதிப்பகத்தில் வெளியிடப்பட்ட மற்ற கதைகள் பற்றிய விளம்பரங்கள்.
எட்டு கதைகள், எட்டு முத்துக்கள்.
அடுத்த பாகம் இந்த ஆண்டு வரும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அட சொல்ல மறந்துவிட்டேனே.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
Happy Reading!!!